கடவுள் உருவங்களை கொண்டு காண வேண்டும்

கதாவனி

எந்த வடிவங்களை நீங்கள் கண் கொண்டு முழுதாக காண வேண்டும் என்று மகான்கள் ஏற்பாடு செய்து வைத்தார்களோ அதை மறைத்து விட்டு வெறும் அலங்காரங்களை பார்த்துவிட்டு வருகிறீர்கள்.

புராதானக் கோவில் கருவறைகளில் உள்ள சிலைகள் யாவும் பல்வேறு இறை அடியார்களால், ஞானிகளால், சித்தர்களால் அமைக்கப் பெற்றவையே. சிலைகளுக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த கற்களின் வகை, அவற்றின் தன்மை, சிற்பத்தின் வடிவம், அளவுகள் இவை யாவற்றின் பின்னுள்ள மறை அறிவியல் நமக்கு விளங்குவதில்லை.

சிற்ப சாத்திர விதிப்படியோ, ஆகம விதிப்படியோ அவற்றிற்கு தேவையான ஆடை ஆபரணங்களோடு தான் அவை ஏற்கனவே செதுக்கப்பட்டிருக்கும். கோவிலுக்கு வரும் மானிடர்கள் இந்த தெய்வ உருவங்களை முழுமையாக கண்டு, உள்வாங்கி சிந்தையில் பதித்துக்கொண்டு, தியானிக்க வேண்டும் என்பதற்காக தான், ஒரு தீப ஒளியைக் கொண்டு அந்த முழு உருவத்தையுமே சுற்றிக் காட்டுவார்கள் பூசை செய்வோர்.

ஆனால் இன்றோ நம் மக்கள், அலங்காரம் செய்து அழகு பார்க்கிறோம் என்கிற மனநிலை கொண்டு அந்த உருவங்களை மாலைகளாலும், துணிகளாலும், இன்னும் பல வேண்டாத பொருள்கள் கொண்டும் மறைத்தே விடுகின்றனர். இது அறிவுக்கு பொருந்துகிறதா என்பதை நீங்களே சிந்தனை செய்யுங்கள். எந்த வடிவங்களை நீங்கள் கண் கொண்டு முழுதாக காண வேண்டும் என்று மகான்கள் ஏற்பாடு செய்து வைத்தார்களோ அதை மறைத்து விட்டு வெறும் அலங்காரங்களை பார்த்துவிட்டு வருகிறீர்கள். அந்த உருவங்களின் பின்னுள்ள மறை அறிவியல் குறித்து என்றாவது சிந்தித்தீர்களா? இறைவன் தன்னை எளிமையாகவே வெளிக்காட்டி அமர்ந்தாலும், மக்கள் அவனை அலங்காரங்களால் மறைத்தே விடுகின்றனர்.

உயிரிகளை போன்று, கற்களுக்கும் பல்வேறு வகைப்பட்ட தன்மைகள் உள்ளன. தெய்வச் சிலைகள் செய்யப்பட்டுள்ள கற்களின் தன்மையை பொறுத்து அவைகளின் வெப்பத்தை தக்க வைக்கவோ, அல்லது அதில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நுண் ஆற்றல்களை பராமரிக்கவோ சில குளிப்பாட்டுகள் (அபிஷேகம்) செய்வர். அது நீர், தேன், பால், தயிர், நெய், எண்ணெய், விபூதி, இலைகள், மலர்கள் என்று சில இயற்கையான மூலப்பொருள்கள் கொண்டு அவற்றை குளிப்பாட்டுவர். அவற்றை செய்துமுடித்துவிட்டு முன்புபோல அவற்றை பக்தர்களின் பார்வைக்கு திறந்த வெளியாக வைக்க வேண்டும்.

அதிகபட்சம் ஒற்றைத் துணி அல்லது ஒற்றை மாலை கொண்டு அலங்கரிக்கலாம். அதிலும் தெய்வ உருவங்களின் முக்கால்வாசி பகுதி பக்தர்களின் கண்கள் தரிசிக்கிற அளவில் விட்டு வைக்க வேண்டும். இன்று பல கோவில்களில் இப்படியெல்லாம் நடப்பதே இல்லை. இதை பக்தர்களாவது சிந்தித்து பூசை செய்வோரிடம் எடுத்து சொல்லுங்கள். சிலைகளின் மேல் போடப்பட்டுள்ள மலர்மாலைகள், சந்தனங்கள், பட்டுத்துணிகள், இவற்றை உங்களால் கடைகளில் கூட பார்த்து ரசிக்க முடியும். வாங்க முடியும். ஆனால் கோவில் கருவறையில் உள்ள உருவங்களை நீங்கள் வேறு எங்கே காண முடியும்? அதுவும் நேரடியாக? கோவிலில் மட்டுமே காணும்படி அமைக்கப்பட்டுள்ள தெய்வ உருவங்களை மறைத்துவிட்டு, பின் எதை காண்பதற்காக கோவிலுக்கு செல்கிறோம். சிந்தனை கொள்வீராக.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES